இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சமீபத்தில் தாக்கிய டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 627 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 மாவட்டங்களில் வசிக்கும் 6 லட்சத்து 11 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 21.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கிய 190 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் இன்று (டிசம்பர் 9) இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வளி மண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும். பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு தீவின் பிற பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலையில் மூடுபனி நிலவும்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளி மண்டலவியல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


