ஜப்பானின் வடகிழக்குப்பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அது 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜேஎம்ஏ) சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஜப்பானின் அமோரி மாகாண கடற்கரையில் இன்று காலை 11:44 மணிக்கு 20 கி.மீ (12.4 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜேஎம்ஏ தெரிவித்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவிலானதாக தெரிவித்துள்ளது.
ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், பிராந்தியத்தின் அணுசக்தி நிலையங்களில் அசாதாரணங்கள் இருப்பதற்கான உடனடி அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. தேசிய ஒளிபரப்பாளரான என்ஹெச்கே, நிலநடுக்கத்தின் அதிர்வு அளவு திங்களன்று அதே பகுதியில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை விடக் குறைவாக இருந்ததாகவும், சாலைகள் பள்ளமானதுடன், ஜன்னல்கள் உடைந்து, 70 சென்டிமீட்டர் (2.3 அடி) வரை சுனாமி அலைகளைத் தூண்டியதாகவும் கூறியுள்ளது
கடந்த 8-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, வடக்கில் ஹொக்கைடோவிலிருந்து டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா வரை பரந்த பகுதியில் வசிப்பவர்கள், ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு ஜேஎம்ஏ எச்சரிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


