காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார். அவருக்கு வயது 91.
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகராட்சி தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய சிவராஜ் பாட்டீல், லத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 7முறை வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் வரை மத்திய உள்துறை அமைச்சராகவும், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார். பஞ்சாப் ஆளுநராக இருந்த சிவராஜ் பாட்டீல், 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றினார்.
இந்த நிலையில், லத்தூர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது, வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் சிவராஜ் பாட்டீல் இன்று (டிசம்பர் 12) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


