தமிழக பாஜகவிற்கு கேரளா வெற்றி தந்த உற்சாகம்: நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி

கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (டிசம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுர மாநகராட்சியை பாஜக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றதற்கு கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 45 ஆண்டுகளாகத் தோற்கடிக்கவே முடியாது என்ற இறுமாப்புடன் இருந்த கேரள இடதுசாரி முன்னணியை பாஜக தனித்து களம் கண்டு திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு உள்ளாட்சிகளில் பாஜக கால் பதித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்குக் காரணம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது உள்ள மக்களின் நம்பிக்கையும் கேரள பாஜக தொண்டர்களின் தொய்வில்லாத உழைப்பும் தான்.

கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே கேரளாவில் பாஜகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணி துவங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள எல்லா தொகுதியிலும் வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. கமிட்டி உறுப்பினர்களுக்கு முறையாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்கள் தினமும் மக்களைச் சந்தித்தனர். மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்றனர். கேரள இடது சாரி முன்னணி அரசின் தோல்விகள் மக்களிடம் விளக்கப்பட்டன. இடது முன்னணி மற்றும் காங்கிரஸின் இந்து மத விரோத போக்கை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்.

பூத் கமிட்டி உறுப்பினர்களின் இடைவிடாத உழைப்பின் காரணமாகக் கிடைத்த பாஜகவின் இந்த அபார வெற்றி தமிழக பாஜகவிற்குப் புது உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. தமிழகத்திலும் பாஜக எல்லா சட்டமன்றத் தொகுதியிலும் பூத் வாரியாக கமிட்டிகளை நியமித்துவிட்டது. அவர்களுக்கான பயிற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். அப்போது பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலைச் சரி பார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதா என்பதைச் சரி பார்த்து அவர்களைப் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். தகுதியில்லாத புது வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தால் அதனை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும். தமிழகத்திலும் ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலை மக்களிடம் காணப்படுகிறது. அதனை நாம் முறையாகப் பயன்படுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தருவோம். பிரதமர் நரேந்திர மோடிக்கு  அவ்வெற்றியைச் சமர்ப்பிப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

பாமகவில் ஏற்பட்ட பிரச்னைக்கு யார் காரணம்?: ஜி.கே.மணி மனந்திறந்த பேட்டி

அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் நடக்கும் அதிகார போட்டிகாரணமாக கட்சி இருபிரிவுகளாக இயங்கி வருகிறது. சட்டமன்ற தேர்தல்…

26 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி: அதிர்ச்சியில் பெண் வேட்பாளர் மரணம்!

பாஜக வேட்பாளரிடம் 26 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைடைந்த காங்கிரஸ் கூட்டணி பெண் வேட்பாளர் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *