பாஜக வேட்பாளரிடம் 26 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைடைந்த காங்கிரஸ் கூட்டணி பெண் வேட்பாளர் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இடவக்கோடு வார்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த சிஎம்பி கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் சினி போட்டியிட்டார். இவர் இந்த முறையும் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவாதி 1,889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சினி 1,863 வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் அவர் பாஜக வேட்பாளரிடம் 26 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் சினி அதிர்ச்சியடைந்தார். அவர் போட்டியிட்ட இந்த வார்டில் மேலும் 2 பெண்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்கள் 44 ஓட்டுகள் வாங்கினர். இதனால் சினி தோல்வியடைந்தார் என்று கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலில் வீட்டில் இருந்த சினி திடீரென மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சினி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு தான் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


