அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் நடக்கும் அதிகார போட்டிகாரணமாக கட்சி இருபிரிவுகளாக இயங்கி வருகிறது. சட்டமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை பனையூர் அலுவலகத்தில் வழங்குமாறு அன்புமணி கூறியிருந்தார். ஆனால், விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக டிஜிபியிடம் டாக்டர் ராமதாஸ் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆனால், அன்புமணி மத்திய அமைச்சராகக் கூடாது என்பதில் ஜெ.குரு உறுதியாக இருந்தார். அன்புமணியின் செயல்பாடுகளால் கண்ணீர் வடித்தார் ராமதாஸ். ஏனெனில், ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியிருக்கிறார். அவர் மனசாட்சியோடு பேச வேண்டும்.
அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது. என் அப்பாவுக்கு அடுத்ததாக உங்களை நினைக்கிறேன் என கூறியவர் அன்புமணி. பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு நான் காரணம் என பேசியிருக்கிறார் அன்புமணி. அவர் தான் பாமகவில் ஏற்பட்ட பிரச்னைக்கு காரணம். மனதளவில் கூட துரோகம் நினைக்காத என்னை துரோகி என்று அன்புமணி பேசுகிறார். இது மிகவும் வருத்தமாக உள்ளது. அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.
அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான். அத்துடன் அவரை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாஸிடம் பேசினேன். மேலும், மாவட்டந்தோறும் அன்புமணியை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினேன். அப்படிப்பட்ட என்னை தந்தையையும், மகனையும் பிரித்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் அன்புமணி பேசுகிறார்” என்று ஜி.கே.மணி கூறினார்.


