வாகன விபத்தை ஏற்படுத்தியதாக இலங்கையின் முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல காவல்துறையினரால் இன்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணம் செய்த வாகனம் சபுகஸ்கந்த பகுதியில் ஒரு கார் மீது மோதியது. இந்த விபத்து நேற்று இரவு சபுகஸ்கந்த தெனிமல்ல பிரதேசத்தில் நடைபெற்றது. விபத்தில் காரில் இருந்த ஒரு பெண், ஒரு குழந்தை காயமடைந்தனர். இதையடுத்து அந்தப் பெண் கிரிபத்கொட மருத்துவமனையிலும், அந்த குழந்தை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்புடைய வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விபத்து குறித்து சபுகஸ்கந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்து நடந்த போது அசோக ரன்வல மது போதையில் இருந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. ஆனால், போலீஸார் நடத்தி விசாரணையில் அசோக ரன்வல மதுபோதையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்துக்குப் பிறகு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த அசோக ரன்வலவை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.


