இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,300 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் அரசு அதிகாரி பாய் தியான்ஹுய் தூக்கில் போடப்பட்டார்.
சீனாவில் அரசு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனமான ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளராக இருந்தவர் பாய் தியான்ஹுய். இவர் 2014 மற்றும் 2018-ம் ஆண்டுக்கு இடையில் பல திட்டங்களை வாங்குவதற்கும் நிதியளிப்பதற்கும் ஆதரவாக அவர் பெரும் அளவில் லஞ்சம் பெற்றதாகக் கண்டறியப்பட்டது. அவர் 156 மில்லியன் டாலர்களுக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,300 கோடி) லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கில், தியான்ஜினில் உள்ள நீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ஆனால் பிப்ரவரி 2025-ல் தியான்ஜின் உயர் மக்கள் நீதிமன்றம் மேல்முறையீட்டை நிராகரித்தது, மேலும் வழக்கு உச்ச மக்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. உச்ச மக்கள் நீதிமன்றத்தின் மதிப்பாய்வின் போது, பாய் தியான்சுவே 2014 முதல் 2018 வரை தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பல்வேறு திட்ட நிதி மற்றும் கையகப்படுத்துதல்களுக்கு ஆர்வமுள்ள தரப்பினருக்கு உதவி செய்ததாகவும் தெரியவந்தது. சுமார் 1.108 பில்லியன் யுவான் (157 மில்லியன் அமெரிக்க டாலர்) லஞ்சம் வாங்கியது கண்டறியப்பட்டது.
சீனாவில், ஊழல் வழக்குகளுக்கான மரண தண்டனைகள் இரண்டு ஆண்டு கால அவகாசத்துடன் வழங்கப்படுவது பொதுவானதாகும். அதன் பிறகு தகுதிகாண் காலத்தில் எந்த மீறல்களும் ஏற்படவில்லை என்றால் அவை பெரும்பாலும் ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகின்றன. இருப்பினும், பாய் தியான்ஹுய் வழக்கு விதிவிலக்காகக் கருதப்பட்டது. மாநில நலன்களுக்கு எதிராகவும், மக்கள் நலன்களுக்கு எதிராகவும் இருந்ததாக கூறி பாய் தியான்ஹுய் தூக்கிலிடப்பட்டார். அதற்கு முன்னதாக குடும்ப உறுப்பினர்களை அவர் சந்தித்தார்.


