மியான்மர் மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர்.
மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், கிளர்ச்சியாளர்களின் ஆயுதப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவமனை அழிக்கப்பட்டது, இதில் 34 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேற்கு மாநிலமான ரக்கைனில் மராக்-யு டவுன்ஷிப்பில் உள்ள பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 80 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து ரக்கைனில் மீட்பு சேவைகளுக்கான மூத்த அதிகாரியான வை ஹுன் ஆங் கூறுகையில், ” ஒரு ஜெட் போர் விமானம் இரவு 9:13 மணிக்கு இரண்டு குண்டுகளை வீசியது. ஒன்று மருத்துவமனையின் மீட்பு வார்டைத் தாக்கியது. மற்றொன்று மருத்துவமனையின் பிரதான கட்டிடத்திற்கு அருகே தாக்கியது. இதில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என 17 பெண்கள் மற்றும் 17 ஆண்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் மருத்துவமனை கட்டிடத்தின் பெரும்பகுதி குண்டுவெடிப்புகளால் அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மருத்துவமனைக்கு அருகிலுள்ள டாக்சிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன. மியான்மரின் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. ரக்கைனில் மக்களுக்கு இந்த மருத்துவமனை தான் உதவிகரமாக இருந்தது” என்று கூறினார். மருத்துவமனை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


