தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் இன்று (டிச.13) கூறுகையில், “ தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்க திமுகவின் சட்டத்துறையும் தொண்டர்களும் தீவிரமாகப் பணியாற்றினர். கட்சி சார்பின்றி பணியாற்றினர். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 19-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. சுமார் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இதில் எந்தளவுக்கு உண்மை நிலவரம் தெரிந்தவுடன், அநியாயமாக நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை பெற்றுத் தருவதில் திமுக தீவிரம் காட்டும்.
இந்தியாவில் எஸ்ஐஆர் வேண்டும் என்று நீதிமன்றம் சென்ற ஒரே கட்சி அதிமுக தான். அதில் இருந்து சிலர் திமுகவுக்கு செல்லலாமா, நடிகர் கட்சிக்கு செல்லலமா என்ற மனநிலையில் இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி,, அமித்ஷா பலமுறை தமிழகம் வந்தனர். அவர்களின் அத்தனை பிரச்சாரங்களுக்குப் பிறகும் எல்லா தொகுதிகளிலும் எங்களுக்குக் கிடைத்தது. அதனால் அமித்ஷா மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கேயே இருக்க வேண்டும். அப்போதுதான் திமுக 202 தொகுதிகளில் வெல்லும்” என்றார்.


