மதுரை விமான நிலையத்தில் நீதிபதிக்கு எதிராக முழக்கமிட்ட திமுக எம்எல்ஏ மகனை போலீஸார் வாயைப் பொத்தி தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலமடையில் புதிய பாலம், உத்தங்குடியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பங்கேற்றார். இதன் பின் அவர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் சென்றார். அப்போது அவரை வாழ்த்தி விமான நிலைய வளாகத்தில் திமுக தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது திடீரென ஒரு இளைஞர், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அந்த இளைஞரை அங்கிருந்து வாயைப் பொத்தி தூக்கிச் சென்றனர். விசாரணையில் அந்த இளைஞர், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் மகன் அக்சய் என்பது தெரிய வந்தது. அவர் டெல்லியில் உள்ள சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அக்சய் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தமிழக முதலமைச்சர் இந்த நாட்டின் குரலாக, பாதுகாப்பு கவசமாக இருக்கிறார். அவருடைய குரல்தான் இந்த மாநிலத்தையும் இந்தியாவையும் வரக்கூடிய காலங்களில் காப்பாற்ற முடியும் என்கிற குரலாக உள்ளது.
பாசிச மற்றும் தனது சொந்த கருத்துக்களை நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு தீர்ப்பில் இணைத்து எழுதியது போல் எனக்கு தென்பட்டது. மேலும் அவர் ஒரு நிகழ்ச்சியிலும் அதையொட்டி பேசியிருந்தார். அந்த தீர்ப்பின் மூலம் ‘என்னால் தீபத்தை ஏற்ற முடியவில்லை. நான் வந்துள்ள இந்த மன்றத்தில் தீபத்தை ஏற்றிவிடுவேன்’ என்று நீதிபதி சுவாமிநாதன் கூறியிருந்தார்.
ஊழல் என்பது பணத்தால் மட்டும் கிடையாது. கருத்துக்களாலும் ஆகக் கூடியது. அதேபோன்று கரப்ட் கருத்துகளைக் கொண்ட நீதிபதிகள் இன்று இருக்கின்றனர். விளாத்திகுளம் தொகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது நாடாளுமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பியிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். அந்த நீதிபதிக்கு தகுந்த நீதியை பெற்று தருவார் என்று நம்புகிறேன்” என்றார்.


