சொந்த மகள் உள்ளிட்ட நான்கு குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொலை செய்த சைக்கோ கொலையாளியான பெண்ணை போலீஸார் கைது செய்த சம்பவம் ஹரியாணாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், பானிபட் மாவட்டத்தில் உள்ள நெளலதா கிராமத்தில் டிசம்பர் 1-ம் தேதி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருமண வீட்டுக்கு வந்திருந்த 6 வயது விதி என்ற பெண் குழந்தை காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தையை வீடு முழுவதும் தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள அறையில் வாளி நீரில் மூழகி அந்த குழந்தை உயிரிழந்தது கிடந்தது. அவர் தெரியாமல் வாளியில் விழுந்து இறந்திருக்கலாம் என்று உறவினர்கள் முதலில் கருதினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, அந்த அறையில் வெளிப்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட பூனம்
மேலும், இந்த வழக்கு தொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இறந்த குழந்தையின் அத்தை முறையில் உள்ள பூனம்(36) என்ற பெண் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
ஏற்கெனவே 3 கொலைகள்
அப்போது சிறுமி விதியை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். அத்துடன் அவர் இதே ஏற்கெனவே தனது குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகளை இதே பாணியில் கொலை செய்தேன் என்று கூறியதால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பானிபட் எஸ்.பி. பூபேந்திர சிங் கூறுகையில், “6 வயது சிறுமி விதியின் கொலை வழக்கை விசாரித்த போது, 3 குழந்தைகளின் கொலை சம்பவங்கள் தெரிய வந்துள்ளது. மற்ற குழந்தைகளை விட நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று கூறியதால், அழகான பெண் குழந்தைகளை குறிவைத்து கொலை செய்ய ஆரம்பித்துள்ளார். தண்ணீர் தொட்டியிலோ, வாளியிலோ மூழ்கடித்து கொலை செய்துள்ளார்” என்றார்.
மகனும் கொலை
இக்கொலைகள் குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், கடந்த 2023-ம் ஆண்டு பானிபட் மாவட்டத்தின் பவாத் கிராமத்தில் இரண்டு கொலை செய்துள்ளார். தனது மூன்று வயது சொந்த மகன் சுபம், அவரது மைத்துனியின் ஒன்பது வயது மகள் இஷிகாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இந்த மரணங்கள் விபத்துகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இஷிகாவை கொலை செய்வதை திசை திருப்ப தன் சொந்த மகனையே அவர் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
மேலும் 2 பேருக்கு ஸ்கெட்ச்
கடந்த ஆகஸ்ட் 2025-ல், சிவா கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் பூனம் இருந்துள்ளார். அங்கு, உறவினரின் ஆறு வயது மகள் ஜியாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இந்த கொலை பூனத்தை மேலும் . அச்சமற்றவராக்கியுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி 6 வயது விதியை கொலை செய்து சிக்கிக் கொண்டுள்ளார். மேலும் அவர் இருவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதில் ஒருவர் பூனத்தின் 18 மாத மகன். ஆனால், அதற்குள் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர்.
தந்திரியுடன் தொடர்பு
சோனிபட்டில் உள்ள பூனம் கூறுகையில், நான் மூன்று குழந்தைகளை கொன்று விட்டேன் என்று குரலை மாற்றி பேசுவாள். அத்துடன் ஒரு இளைஞன் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டதாக கூறுவாள் என்றார். உத்தரப்பிரதேசத்தின் கைரானாவை சேர்ந்த ஒரு தந்திரியுடன் பூனம் தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலைகளின் பின்னணியில் அவருக்கும் தொடர்பு இருக்குமா என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜியாவின் தந்தை பூனத்தின் மீது புகார் அளித்துள்ளார். தனது மகள் சாவுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்த்தியுள்ளார்.


