நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்ட குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளா மாநிலம், கொச்சி அருகே 2017 பிப்ரிவரி 17-ம் தேதியன்று, பிரபல நடிகையின் காரை வழி மறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், அதே காரில் அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மலையாளம், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப் படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அவருக்கு நேர்ந்த இந்த கொடுமைக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்தும் போராட்டங்கள் வெடித்தன.
இவ்வழக்கில் பல்சர் சுனி என்ற சுனில் என்.எஸ். மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீம், பிரதீப் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என எர்ணாகுளம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம் வர்கீஸ் கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இவர்கள் மீது ஆள் கடத்தல் (366), பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை (376டி), குற்றவியல் சதி (354பி), குற்றவாளிகளை அடைத்து வைத்தல், ஆதாரங்களை அழித்தல் (201), ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட வீடியோக்களை எடுத்து பகிர்தல் ஆகிய குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். நீண்ட விசாரணைக்குப் பின், நடிகர் திலீப் என்ற பி.கோபாலகிருஷ்ணன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில், குற்றவாளிகள் 6 பேருக்கும் தண்டனை விவரத்தை இன்று அறிவிப்பதாக எர்ணாகுளம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம் வர்கீஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது குற்றவாளிகள் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டனர். ஆனார், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றத்தின் தன்மை கருதி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனையடுத்து, குற்றவாளிகான பல்சர் சுனி என்ற சுனில் என்.எஸ்., மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீம், பிரதீப் ஆகிய 6 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி ஹனி எம் வர்கீஸ் தீர்ப்பளித்தார். மேலும், குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா 50 ஆயிரம் அபராதம் விதித்தும் அவர் உத்தரவிட்டார்.


