தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் புதிய கட்சி தொடங்கி அரசியல் களத்தில் நேரடியாக குதித்துள்ளார்.
“லட்சிய ஜனநாயக கட்சி” (LJK) என்று புதிய கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகம் செய்துள்ளார்.

கட்சி கொடி எப்படி?
நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள், நெற்கதிருடன் ‘LJK’ என்ற எழுத்துக்கள் பதிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
கட்சியின் கொடிக்கு “இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம்” என மும்மத பூஜையும் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



புதுச்சேரி அரசியல்
ஏற்கனவே ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் சகோதரியின் கணவரான ஆதவ் அர்ஜூனா விஜய்யின் “தமிழக வெற்றிக் கழகத்தில்” தலைமை நிர்வாகியாக உள்ளார். தவெக கட்சியும் புதுச்சேரியை குறி வைத்துள்ளது. இந்நிலையில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் புதிய கட்சி தொடங்கியுள்ளது, புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பாஜக-வுடன் நெருக்கம்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜக கட்சியுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் புதிய கட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் அவர் நேரடியாக போட்டியிட உள்ளதாகவும்; அதே சமயத்தில் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்து புதுச்சேரியில் மட்டும் தேர்தலை எதிர்கொள்வார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


