புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி நிரந்தரத் தீர்வு காணத் துணியாமல், வெறும் சட்டமன்றத் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி காலங்கடத்தும் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணியின் செயலுக்கு, ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான ஏ.கே. ராஜசேகர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி தலைவர் கண்டனம்:
இதுதொடர்பாக ஏ.கே.ராஜசேகர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 60 ஆண்டுகாலமாக 16 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், மத்தியில் மாறி மாறி ஆண்ட வந்த மத்திய அரசுகள் அனைத்தும் புதுச்சேரி மக்களை வஞ்சிக்கும் நோக்கில் இதுவரை மாநில அந்தஸ்து வழங்காதது, மக்களாட்சி அதிகாரத்தை சற்றும் மதிக்காத செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
இது, புதுச்சேரி மக்களின் வாக்குரிமையையும், ஜனநாயக அமைப்பின் அடித்தளத்தையுமே கேள்விக்குள்ளாக்கும் செயல் என சாடியுள்ளார்.
கடந்த 60 ஆண்டுகாலமாகப் புதுச்சேரியை ஆட்சி செய்த கட்சிகள் அனைத்தும், முழு மாநில அந்தஸ்து என்ற மக்களின் அடிப்படை ஜனநாயகக் கனவில் மண்ணை அள்ளிப்போட்டதன் உச்சகட்ட வெளிப்பாடே தற்போதைய ஆளும் கூட்டணியின் இந்த ‘வெட்கக்கேடான அரசியல் துரோகம்’ என்றும் ஏ.கே. ராஜசேகர் ஆணித்தரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அநீதி இது!
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரமும் நிதிச் சுதந்திரமும் கிடைக்காமல், ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையேயான ‘இரட்டைத் தலைமை அதிகாரப் போட்டியானது தற்போது உச்சக்கட்டத்தில்’ நீடித்து வருகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆணைக்குச் செய்யப்படும் அப்பட்டமான அநீதி இது!
புதுச்சேரி மக்களின் ஜனநாயக உணர்வுகளையும், மாநில அந்தஸ்து கோரும் இயக்கத்தின் உத்வேகத்தையும் சற்றும் மதிக்காத மத்திய அரசின் அலட்சியம், புதுச்சேரி ஜனநாயகத்திற்குச் செய்யப்படும் மாபெரும் படுகொலையாகும்.
முதல் நடவடிக்கையாக.,
புதுச்சேரி அரசு இனியும் ஒரு நொடி கூட தாமதிக்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகள், சமூக இயக்கங்களின் தலைவர்களையும் உடனடியாக அழைத்துக்கொண்டு புதுடெல்லி சென்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்திப் பெற்றுத் தரும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி ஆணித்தரமாக வலியுறுத்துகிறது என்று ஏ.கே.ராஜஜேசகர் தெரிவித்துள்ளார்.


