September 10, 2026

அதிகாலையில் சோகம்… பக்தர்கள் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்து 9 பேர் பலி

ஆந்திராவில் இன்று அதிகாலை தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9  பக்தர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் இன்று அதிகாலை தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சிந்தூரிலிருந்து மாரேடுமில்லிக்குச் சென்ற பேருந்து காட் சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. உடனடியாக போலீஸார் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பக்தராசலத்தில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு தனியார் பேருந்தில் அன்னவரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த பேருந்தில் 37 பேர் பயணம் செய்துள்ளனர்.  இந்த விபத்தில்  9 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிந்தூர் பகுதி மருத்துவமனை மற்றும் பத்ராசலம் பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பேருந்தை ஓட்டுநர் அதிவேகத்தில் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக அதில் பயணம் செய்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், சித்தூர் அருகே யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. விபத்து குறித்து அதிகாரிகளிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்த விவரங்களையும் அறிந்து கொண்டேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்யும்” என்று கூறியுள்ளார்.

You may have missed