தியாகதுருகம் அருகே அம்மன் கோயில் தேரோட்டம் நடந்தபோது திடீரென தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பல்லக்கச்சேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று திருத்தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் வடம்பிடித்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சாலையில் தேர் வலம் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மழை மற்றும் சூறைக்காற்று அடித்தது. அப்போது தேரின் சக்கரம் சாலையின் அருகில் உள்ள சிறிய பள்ளம் மீது ஏறி இறங்கியது. இதில் நிலைதடுமாறிய தேர் திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது தேர் கவிழ்ந்த இடத்தில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் தேரை பத்திரமாக மீட்டனர். பின்பு தேரில் இருந்த மாரியம்மன் சிலையை பத்திரமாக கோயிலுக்குள் கொண்டு சென்றனர். திடீரென்று தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர் கவிழ்ந்ததால் பக்தர்கள் கவலையடைந்தனர்.

More Stories
குடியிருப்பில் மின்தூக்கி பழுதடைந்ததால் 4 இளைஞர்கள் 90 நிமிடங்கள் சிக்கித் தவிப்பு…
குடும்ப தகராறில் பயங்கரம் கண்ணில் மிளகாய் பொடி தூவி மனைவியை வெட்டிய கணவர்
50 பவுன் கோயில் நகைகளை விற்று 6 பேர் கும்பல் கையாடல்…