திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலப் பிரச்சினை காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளரான தெய்வத்தின் தாயாரைத் தாக்கி, சேலையைப் பிடித்து இழுத்து அரிவாள் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் 5 பேர் மீது ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தும், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

​வழக்கின் பின்னணி:

​மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வேடர்புளியங்குளம், மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தெய்வம் (42). இவர் பாமக-வின் திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான விளைநிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

​இவர்களது நிலத்தின் அருகிலேயே C. ஆண்டிக்காளை என்பவரின் நிலமும் அமைந்துள்ளது. இரு தரப்பினருக்கும் பொதுவாக நீர் இறைத்து விவசாயம் செய்ய ஒரு கிணறு உள்ளது. இது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு சமரச உடன்படிக்கைப் பத்திரமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

​இந்நிலையில், தெய்வத்தின் நிலத்தையும் சேர்த்து கிரயம் செய்து அபகரிக்கும் நோக்கில், எதிர்மனுதாரர்களான ஆண்டிக்காளை குடும்பத்தினர் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளனர். நிலத்திற்குச் செல்லும் பாதையில் முள் வெட்டி போடுவது, கண்ணாடி பாட்டில்களை உடைத்துப் போடுவது மற்றும் தண்ணீர் பாய்ச்சும் பைப்லைன்களை உடைப்பது எனத் தொடர் தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளனர்.

தாக்குதல் & அரிவாள் மிரட்டல்:

​கடந்த மாதம் 14-ம் தேதி காலை, பாமக ஒன்றிய செயலாளர் தெய்வத்தின் தாயார் விளைநிலத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வந்த எதிர்மனுதாரர்கள், அவரது தாயாரை மிகக் கேவலமாக அவதூறாகப் பேசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

​இதைத் தட்டிக்கேட்கச் சென்ற தெய்வத்தையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, சேலையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளித் தாக்கியதாகப் பேசப்படுகிறது. மேலும், அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் உயிருக்குப் பயந்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி வந்தனர்.

​5 பேர் மீது வழக்கு – இதுவரை கைது இல்லை!

​இச்சம்பவம் குறித்து தெய்வம் அளித்த புகாரின் பேரில்:

  1. C. ஆண்டிக்காளை (த/பெ. சீனிமூப்பர்)
  2. ராஜம்மாள் (க/பெ. C. ஆண்டிக்காளை)
  3. ரமேஷ் (த/பெ. C. ஆண்டிக்காளை)
  4. முனீஸ்வரன் (த/பெ. C. ஆண்டிக்காளை)
  5. முனீஸ்வரன் மனைவி

​ஆகிய 5 பேர் மீதும் ஆஸ்டின்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் T. கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

​இருப்பினும், பெண் என்றும் பாராமல் தாக்குதல் நடத்தி, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் போலீசார் இதுவரை கைது செய்யாமல் தாமதம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெய்வம் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது.

You may have missed