தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பிடி செல்வகுமார், விஜய் நடித்த புலி படத்தை தயாரித்திருந்தார். சமீப காலமாக தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பி.டி.செல்வகுமார் பேட்டி அளித்து வந்தார். அப்போது, விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பி.டி செல்வகுமார் நூற்றுக்கணக்கானோருடன் இன்று (டிசம்பர் 11) திமுகவில் இணைந்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக வந்துள்ளவர்களால் எங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஜய்யின் மக்கள் இயக்கத்திற்கு தூணாக இருந்தேன். விஜயின் ரசிகர் மன்றத்திற்கு தவெகவில் முக்கியத்துவம் இல்லை. அதனால், முதலமைச்சர் தலைமையிலான திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்றும் வகையில் கட்சியில் இணைந்துள்ளேன்” என்றார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் விஜய்க்கு மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


