கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(டிசம்பர் 11) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கேரளா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல், முதற்கட்டமாக கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 12-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) மற்றும் பாஜகவின் என்டிஏ கூட்டணி களத்தில் உள்ளன.
இன்று நடைபெறும் தேர்தலில் 38,994 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 470 கிராமப் பஞ்சாயத்துகள், 77 பிளாக் பஞ்சாயத்துகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள், 47 நகராட்சிகள் மற்றும் கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் உள்ளிட்ட மூன்று மாநகராட்சிகள் என 604 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
கண்ணூர் மாவட்டம், பினராயி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வாக்களித்தார். திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய வடக்கு மாவட்டங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.


