வாக்காளர்களிடம் கொடுக்கப்பட்ட எஸ்ஐஆர் விண்ணபங்களை படிவங்களை வாக்குச் சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க நாளை (டிசம்பர் 11) கடைசி நாளாகும்.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆர்) தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 4-ம்தேதி தொடங்கியது.
இந்த 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,99,72,687 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,95,77,592 கணக்கெடுப்பு படிவங்கள் நேற்று (டிசம்பர் 9) வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,40,84,624 கணக்கெடுப்பு படிவங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 6,38,25,877 படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 10,21,566 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10,21,204 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களிடம் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை வாக்குச் சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க நாளை கடைசி நாளாகும். இதன்பின் டிசம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


