கடந்த 8 நாட்களாக நாடு முழுவதும் பயணிகளை கதற விட்ட இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்யுள்ளதாக அந்த நிறுவன அதிகாரி அறிவித்துள்ளார். ஆனால், சென்னையில் இன்றும் 14 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த எட்டு நாட்களாக பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் பல விமானங்களை ரத்து செய்து இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை தந்துள்ளது. இந்த நிலையில் தற்போது அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ” டிசம்பர் 5-ம் தேதி, இண்டிகோ 700 விமானங்களை மட்டுமே இயக்க முடிந்தது. டிசம்பர் 6-ம் தேதி 1,500 விமானங்களும், டிசம்பர் 7-ம் தேதி 1,650 விமானங்களும், டிசம்பர் 8-ம் தேதி 1,800 விமானங்களும், இன்று (நேற்று) 1,800க்கும் மேற்பட்ட விமானங்களும் இயக்கப்பட்டன. திங்கட்கிழமை முதல், எங்கள் நெட்வொர்க்கில் உள்ள 138 நகரங்களுக்கும் நாங்கள் விமானங்களை இயக்குகிறோம்.
மேலும் எங்கள் நேரமின்மையும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. எங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது நாங்கள் உங்களை சிரமப்படுத்தினோம், அதற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதற்கும், மீண்டும் இண்டிகோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததற்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். விமான நிறுவனத்தின் செயல்பாட்டு பிரச்னையால், குளிர்கால அட்டவணையில், 10 சதவீத விமான சேவையை குறைக்கும்படி இண்டிகோவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 9-வது நாளாக இன்றும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இன்று ( டிசம்பர் 10) டெல்லி, மும்பை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 14 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


