சென்னையை அடுத்த வானகரத்தில் பரபரப்பான சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. இந்த சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, அதிமுக மூத்த தலைவர்கள் பலரும், அதிமுக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தலைவர்களும் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தவெகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வமும், அதிமுகவின் பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றால் டிசம்பர் 15-ம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்தார்.
இதன் பின் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவதாக அமித்ஷா கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 10) நடைபெறுகிறது. இதில், சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் சுமார் 5,000 பேர் பங்கேற்ற உள்ளதாக தெரிகிறது. சுமார் 10,000 பேருக்கு அசைவ உணவு தயார் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.


