தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று (டிசம்பர் 9) பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் துவக்கியுள்ள நடிகர் விஜய், விக்ரவாண்டி, மதுரையில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தினார். கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பங்கேற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், விஜய் மீது கடும் விமர்சனத்தை வைத்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவ வருகிறது.
இந்த நிலையில், ஒரு மாதமாக எந்த நிகழ்விலும் பங்கேற்காத விஜய், காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பேசுகிறார். இந்த கூட்டம் புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் நடைபெற உள்ளது. கரூர் போல அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக புதுச்சேரி போலீஸார், அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதன்படி புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை இக்கூட்டம் நடைபெறும். புதுச்சேரி பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தவெகவினர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூடாது.
இக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மைதானம் பல்வேறு தடுப்புகளால் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்குள்ளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். விஜய் வாகனத்தை இருசக்கர மற்றும் பிற வாகனங்களில் யாரும் பின் தொடரக் கூடாது. அனுமதி பெறாமல் பதாகைகள், வளைவுகள் வைக்கக் கூடாது தனியார் கட்டிடங்கள், சாலை ஓர மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வாகனங்கள் மீது யாரும் ஏறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு அருகே உள்ள தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து யாரும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.


