சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் சிறப்பு திரையிடலுக்குத் தேர்வாகியுள்ளது.
சென்னை சர்வதேச திரைப்படவிழாவை கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் நடத்தி வருகிறது. அந்த வகையில் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அவற்றில் 13 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.
இவ்விழாவில் உலகப்புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். உலகின் மற்ற பிரபலமான திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்கள் இந்த ஆண்டு திரையிடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இவ்விழாவில் திரையிடப்பட்ட 12 தமிழ் படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், பறந்து போ, 3 பிஎச்கே, அலங்கு, வேம்பு, பிடிமண், காதல் என்பது பொது உடைமை, மாயக்கூத்து, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், மெட்ராஸ் மேட்னி, மருதம் ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இப்படங்களைத் தவிர்த்து சிறப்பு திரையிடலுக்கு பாட்ஷா படம் தேர்வாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா பங்களிப்பை போற்றும் விதமாகவும், பாட்ஷா படத்தின் 30 ஆண்டு கால பயணைத்தையும், சத்யஜோதி பிலிம்ஸின் 60 ஆண்டு கால பயணத்தையும் கொண்டாடும் விதமாக இப்படம் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


