தவெக தலைவர் நடிகர் விஜய் தலைமையில் பனையூரில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (டிச.11) நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களம் காண உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் துயரத்திற்கு பிறகு கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு தடை போட்ட விஜய், கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் உள்ள சுங்குவார் சத்திரத்தில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தினர். புதுச்சேரியில் முதன் முதலாக பொதுக்கூட்டத்திலும் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில், விஜய் பங்கேற்க இருந்த ஈரோடு தவெக பிரசார கூட்டம், டிச.18-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பனையூரில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளருமான விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை (டிசம்பர் 11) காலை 10.00 மணிக்கு சென்னை தலைமை நிலையச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகளும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மற்ற தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று அறிவித்துள்ளார். இந்த சட்டமன்றத் தேர்தல் பணிகள், சிறப்பு திருத்தப் பணிகள், அடுத்த கட்ட மக்கள் சந்திப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


