தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். பக்தியை வைத்து பகையை வளர்க்க கூடாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள, ஏழை எளிய முதியோர்களுக்காக ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மண்டலம் வாரியாக இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் 2025-2026-ம் ஆண்டின் ஆன்மிக சுற்றுலாவிற்காக சென்னையில் ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” தமிழ்நாடு எல்லோருக்குமான மாநிலம். இங்கு பிரிவினை எடுபடாது. சனாதனம் என்பது இறைக்கொள்கை அல்ல. சமாதானம் என்பது தான் இறைக்கொள்கை.
பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். பக்தியை வைத்து பகையை வளர்க்க கூடாது. தமிழ்நாட்டிலும் திமுக ஆட்சியிலும் பிரிவினை எப்போதும் எடுபடாது. ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்பரம்-காசி ஆன்மிக பயணத்தில் 602 பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றிய பின் மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு? இது சட்டத்தை மதிக்கும் அரசு. பக்தர்களின் நலன் காக்கும் அரசு” என்றார்.


