திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்ஹா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்ஹா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருக்கிறார். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பங்குன்றத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்பட ஏராளமானோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


