‘ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போகமாட்டீங்களா’ என்று தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து ஈரோடு முழுவதும் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த உடனே அன்று இரவு சென்னையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கரூருக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். ஆனால், தவெக தலைவர் விஜய், சம்பவம் நடைபெற்ற உடனே கரூரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்று விட்டார். இந்த சம்பவம் விஜய் மீது கடும் விமர்சனத்தை எழுப்பியது.
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால், தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மாமல்லபுரம் அழைத்து நலம் விசாரித்தார். இதுவும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்தால் ஒரு மாதமாக வெளி நிகழ்வுகளில் பங்கேற்காத விஜய், கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் கடந்த 9-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
இந்த நிலையில், ஈரோட்டில் இன்று (டிசம்பர் 18) நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசு உள்ளார். ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் வருகையை முன்னிட்டு ஈரோடு முழுவதும் விதவிதமான கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ‘ ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போகமாட்டீங்களா’ என்ற கேள்வியோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் ‘ இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லான்ஞ்சுக்கு மலேசியா போறீங்க. வாட் ப்ரோ, இட்ஸ் வெரி ராங் ப்ரோ’ என்ற வாசகங்களுடனும் ‘விஜய் பரிதாபங்கள்’ என்ற தலைப்பில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


