கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்தி பேசியபோது, ஆண்டாள் வேட தமிழச்சி எங்கே போனார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் சென்னை திமுக எம்,பியும், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி தங்கபாண்டியன். ஆண்டாள் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அத்துடன் அந்த பதிவில்,
“அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்
இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக் கொடுத்த சுடர்கொடியே ” என்ற திருப்பாவை பாடலோடு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வந்தன. இதற்கு பாஜகவினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சனாதன இந்து தர்மத்தை ஒழிப்போம், சனாதனம் என்பது, கொசு, டெங்கு, மலேரியா போன்றது, என்றெல்லாம் பேசி, இந்துக்களுக்கு எதிராக செயல்படும், திமுக எம்.பி., தமிழச்சி, தன்னை ஆண்டாள் கோலத்தில் அலங்கரித்து, இன்ஸ்டாகிராமில் படம் வெளியிட்டு, விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்.
திமுக கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்தி பேசியபோது, ஆண்டாள் வேட தமிழச்சி எங்கே போனார்? கம்யூனிஸ்ட்டுகள், திராவிடர் கழக பேச்சாளர்கள், இந்து சமய தெய்வங்களை, நம்பிக்கைகளை மட்டும் குறிவைத்து, இழித்து பழித்து, கேலி கிண்டல் செய்து, அவமதித்து பேசியபோது, அமைதி காத்த தமிழச்சி, இன்று ஆண்டாள் வேஷம் போடுவது ஏன்? யாரை ஏமாற்ற இப்படியெல்லாம் வேஷம் தரிக்கிறார்.
விரைவில், முஸ்லிம் பெண்மணி வேடம் அணிந்தும், கிறிஸ்தவ கன்னியாஸ்திரி கோலத்திலும், தன்னை அலங்கரித்து, படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். ஒரு பக்கம் சனாதன எதிர்ப்பு போர்வையில் இந்து தர்மத்தை அழிக்க முயலுவதும் இன்னொரு பக்கம் கடவுள் ஆண்டாள் வேடமிட்டு, தன்னை கடவுளாக காட்டிக் கொள்ள முயலுவதுமாக அவர் போடும் இரட்டை வேடத்தை தமிழர்கள் ரசிக்க மாட்டார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.


