மத்திய அரசின் புதிய திட்டத்தால் தமிழக அரசு மீதான சுமை கூடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வசிக்கும் கிராமப்புற மற்றும் ஊரகப் பகுதி மக்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய காங்கிரஸ் அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்தியது. கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இந்த திட்டம் பாஜக ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு பதிலாக. மத்திய அரசு விக்க்சித் பாரத்- ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) அதாவது விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனல் வீசி வருகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவருமான நடிகர் கமல்ஹாசன் எம்.பி கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், ” மத்திய அரசின் புதிய திட்டத்தால் தமிழக அரசு மீதான சுமை கூடுகிறது. ஏழை மக்களுக்குக் கிடைக்கும் உதவியும், நலத்திடங்களும் குறைகிறது. பெயர் மாற்றத்தை விட நிதி குறைப்பால் தான் பாதிப்புகள் அதிகம். நீதி குறிப்பு தொடர்பாகவே இப்போது நாம் பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


