கோழிக்கோடு வந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கொசசி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம், கோழிக்கோட்டுக்கு 160 பயணிகளுடன் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதனால் உடனடியாக கொச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 160 பயணிகளும் எந்த ஆபத்துமின்றி உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து கொச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,” நடுவானில் ஏற்பட்ட பழுது காரணமாக ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் அவரசமாக தரையிறக்குவது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக அனைத்து அவசர சேவைகளையும் தயார் நிலையில் வைத்தோம். காலை 9.07 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அதன்பிறகு, ஆய்வு செய்த போது, விமானத்தின் வலது பக்கம் உள்ள இரு டயர்களும் வெடித்திருந்தன” என்றனர்.


