ராமேஸ்வரத்தில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதுபோதை இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரத்தை அடுத்த மல்லிகா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஆரோக்கியம். இவர் தனது மனைவியுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
போதை இளைஞர்கள் அத்துமீறல்
சாலையில் நடந்து சென்ற கணவர், மனைவி இருவரையும், அந்த மதுபோதை இளைஞர்கள் 4 பேரும் வழிமறிந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை
இதையடுத்து, கணவர் கண் முன்னே மனைவியிடம் அடையாளம் தெரியாத 4 இளைஞர்களும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே, பாதிக்கப்பட்ட அப்பெண் அலறடித்துக் கொண்டு 4 பேரிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
தப்பித்து வந்த அப்பெண் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பியோடிய 3 இளைஞர்களுக்கு வலைவீச்சு!
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேரில், ஒரு இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெண்ணை தாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீப நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.


