தமிழக மக்களை பொறுத்தவரை, நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சித் தளபதிதான் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று (டிசம்பர் 18) நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தவெக விஜய் அங்கிருந்து கூட்டம் நடைபெறும் இடத்துக்கு கார் மூலம் வந்தடைந்தார். அவருக்கு திரண்டிருந்த கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பேசினார், அப்போது அவர் பேசுகையில், “பெரியார் பிறந்த மண்ணிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகைத் தந்துள்ளார். இந்த கூட்டத்தை பார்க்கும் போது, நாளைய தமிழகத்தின் முதலமைச்சர் என்ற வரலாற்றை படைக்கும் கூட்டமாக இது தெரிகிறது. எப்படி ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல பேர் கனவு காணுகிறார்கள். ஆனால், தமிழக மக்களை பொறுத்தவரை, நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சித் தளபதிதான்.
ஏழை மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு ஒரு நல்ல தலைமை வேண்டும். பல நாட்கள் மக்கள் கண்ட கனவு இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கூடும் கூட்டம் கலைந்துபோகும். ஆனால் நம்முடைய கூட்டத்தை பொறுத்தவரை எதிர்கால தமிழகத்தை உருவாக்க இருக்கிற தவெக தலைவருடையது.
நமது தலைவர் மனித நேயம் மிக்கவர்,நல்லவர், வல்லவர். ஏனென்று சொன்னால் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அவர், அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். புரட்சி தலைவரை பார்த்திருக்கிறேன். இன்று புரட்சி தளபதியை காண்கிறேன். இது தீர்ப்பளிக்கும் கூட்டம். 234 தொகுதிகளிலும் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ அவர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்கள்” என்றார்.


