திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இரண்டு நாட்களில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு சர்ச்சையாகியுள்ளது. இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் காவல்துறையின் தடையை மீறி இரண்டு நாட்களாக தீபம் ஏற்ற முயன்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய அந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் இன்று (டிசம்பர் 5) தமிழக அரசு வழக்கறிஞர் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு வழக்கு நடைமுறைப்படி இரண்டு நாட்களில் விசாரணைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு தெரிவித்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு டிசம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


