பிஹாரில் தனது 5 குழந்தைகளை தூக்கிலிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவரது 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.
பிஹார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், நாவல்பூரில் உள்ள மிஸ்ரௌலியா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நான்கு பேர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சக்ரா காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று பார்த்த போது அமர்நாத் ராம்(35) என்பவர் தூக்கிட்டு இறந்து கிடந்தார். அவர் அருகில் அவரது மகள்கள் அனுராதா குமாரி (12), ஷிவானி குமாரி (11), மற்றும் ராதிகா குமாரி (7) ஆகியோரும் தந்தையுடன் ஒரே சேலையில் தூக்கிட்டு இறந்து கிடந்தனர். அந்த வீட்டில் இருந்த அமர்நாத்தின் மகன்கள் சிவம் குமார் (6) மற்றும் சந்தன் குமார் (5) ஆகியோர் பக்கத்து வீட்டில் அளித்த தகவலின் அடிப்படையிலேயே போலீஸார் அங்கு விரைந்தனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அமர்நாத் ராமின் மனைவி ஒரு ஆண்டுக்கு இறந்து விட்டார். அதன் பிறகு அமர்நாத் ராம் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அத்துடன் அவர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததாகவும், ஐந்து குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதனால் 5 குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக உயிர் பிழைத்த சிறுவன் சிவம் குமார் கூறுகையில், ” அம்மாவின் சேலையில் தூக்கு போல தயார் செய்து எங்கள் 5 பேரின் கழுத்தில் மாட்டி விட்ட அப்பா, அதே போல அவரும் தூக்கை மாட்டிக் கொண்டார். ஒரே நேரத்தில் கீழே குதித்து தற்கொலை செய்ய வேண்டும் என்று எங்களிடம் கூறினார். எங்கள் அக்கா 3 பேரும், அப்பாவும் கீழே குதித்தனர். நாங்கள் இருவரும் பயந்து போய் குதிக்கவில்லை” என்றார்.
மனைவியின் சேலையில் தூக்கிட்டு 3 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை செய்த சம்பவத்தை நேரில் கண்ட அதிர்ச்சியில் உறைந்த இரண்டு சிறுவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


