மெக்சிகோவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய விமானம் ஒரு கட்டிடத்தில் மோதியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
மத்திய மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகபுல்கோவிலிருந்து சிறிய வகை விமானம் நேற்று புறப்பட்டது. அந்த விமானம் மெக்சிகோ நகரத்திற்கு மேற்கே சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள டோலுகா விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் பறந்த போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனால் அவசரமாக சான் மெடிகோ அடென்கோ பகுதியில் உள்ள தொழிற்பூங்கா அருகே விமானத்தை விமானி தரையிறக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தொழிற்பூங்கா கட்டிடத்தின் மீது விமானம் மோதி தீப்பற்றியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்ததாக மெக்சிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அட்ரியன் ஹெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ” தனியார் ஜெட் விமானம் எட்டு பயணிகளையும் இரண்டு பணியாளர்களையும் ஏற்றிச் சென்ற போது விபத்திற்குள்ளானதில் 7 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது” என்றார். இதனால் மற்றவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


