டெல்லி- ஆக்ரா விரைவுச்சாலையில் நிலவும் அடர்ந்த மூடுபனியால் இன்று 6 பேருந்துகள், 2 கார்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் விபத்துகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை நிலவிய அடர்ந்த மூடுபனியால், உத்தரப்பிரதேசத்தில் டெல்லி- ஆக்ரா விரைவுச் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள், போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசரகால மீட்புக் குழுக்கள் விரைவாக விரைந்து தீயை அணைத்தன. இந்த சம்பவம் தொடர்பாக மதுரா போலீஸார் கூறுகையில், ” மதுரா மாவட்டத்தில் உள்ள யமுனா விரைவுச் சாலையின் ஆக்ரா-நொய்டா வண்டிப்பாதையில் இன்று (டிசம்பர் 16) அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 6 பேருந்துகள் மற்றும் 2 கார்கள் அடுத்தது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அடர்ந்த மூடுபனியால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


