தமிழ்நாட்டில் நடைபெறும் மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் தமிழகம் வருகிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டின் மீது பாஜக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. வலிமையான கூட்டணியை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, மேலும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறது. பொதுவாக தேர்தலுக்கு முன்பு குறைந்தது 3 முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து விடுவார். அதன்படி வருகிற ஜனவரி மாதத்தில் அவரது முதல் பயணம் தொடங்க இருக்கிறது.
ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா, விவசாயிகளை சந்திக்கும் நிகழ்ச்சி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழா ஆகிய இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. இதில் ராமேஸ்வரம் காசி தமிழ் சங்கம விழாவை இந்த மாத இறுதியில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது.
தற்போது பிரதமரின் வருகைக்காக அது தள்ளிப்போகும் என தெரிகிறது. இந்த விழா நடைபெறும் நேரத்திலேயே மற்ற இரண்டு நிகழ்ச்சிகளையும் நடத்தலாமா அல்லது பிரதமர் மோடியின் தேதி கிடைக்காத பட்சத்தில் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழாவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கலந்து கொள்ள செய்து விட்டு மற்ற இரண்டு விழாக்களையும் பிரதமர் மோடியை பங்கேற்க செய்யலாமா என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பிரதமர் வரும் தேதியை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் ஓரிரு நாட்களில் தேதி முடிவாகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


