திருப்பரங்குன்றம் மலையில் தர்ஹா அருகே எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று (டிசம்பர் 5) காலை விசாரிக்கிறார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில், மலை உச்சியில் தர்ஹா அருகே உள்ள எல்லை கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து தாம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நேற்று (டிசம்பர் 4) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் விசாரித்தார். அப்போது,” திருப்பரங்குன்றம் தர்ஹா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்; மனுதாரருக்கு காவல்துறை பாதுகாப்பு தர வேண்டும்; திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்கிறேன்” என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். தமது உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக இரவு 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியிருந்தார்.
ஆனால், திருப்பரங்குன்றம் மலையில் மனுதாரர் உட்பட பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்வதால் அனுமதிக்க முடியாது என்பதில் போலீஸார் உறுதியாக இருந்தனர். இதனால் அங்கு போராட்டம் நடத்திய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதை நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தற்போது தீபம் ஏற்றக்கோரும் இடம் தர்ஹாவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. அதனால் ஏற்படும் தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்கவே அனுமதிக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை நடத்துகிறார்.


