கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னையில் மதுரை மாவட்டத்தில் நீதிபதி ஒருவர் கலவரத்திற்கு வித்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் சுகாதாரப் பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்புக்கான வரி விதிப்பு மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மதுரை திருப்பரங்குன்றம் தீபத்திருவிழா விவகாரம் குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,” மதுரை மாவட்டத்தில் நீதிபதி ஒருவர் கலவரத்திற்கு வித்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் நீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையை தனது ஒருதலைப்பட்சமான தீர்ப்பை அமலாக்க அவர் பயன்படுத்தி உள்ளார். இது மாநில காவல்துறைக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் அபாயகரமான நடவடிக்கை.
தமது தீர்ப்பை அமலாக்குவதற்கான காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை வழங்க முயற்சிக்கிறார். இந்த நீதிபதியின் நடவடிக்கையால் மதக் கலவரம் உருவாகும்; அவர் மீது ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினார். அவர் பேச்சு மக்களவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


