
ஒரே ஒரு இரத்த மாதிரியை கொண்டு மனித ஆயுளை மதிப்பீடு செய்யும் புதிய பரிசோதனை முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வயதாகும் செயல்முறை ஆரோக்கியமாக நடைபெறுவதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும் உடல் மற்றும் மனரீதியான செயல்பாட்டின் ஒரு அளவீட்டை வெறும் ஒரு துளி ரத்தம் அல்லது உமிழ்நீர் மூலமாக கண்டுபிடிக்கும் ஒரு முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த புதிய சோதனையானது ஒரு நபரின் DNA மீத்தைலாக்கத்தை கண்டு, இறப்பு ஏற்படுவதற்கான அபாயம் மற்றும் அவருடைய வயதாகும் செயல்முறை போன்ற அனைத்தையும் கண்காணிப்பதற்கு உதவுகிறது.
இன்டிரின்சிக் கெப்பாசிட்டி (“Intrinsic Capacity) என்று அழைக்கப்படும் இந்த திறனை உலக சுகாதார மையமானது ஒரு நபரின் அனைத்து உடல் மற்றும் மன ரீதியான திறன்களாக வரையறுக்கிறது. இதில் தனிநபரின் யோசிக்கும் திறன், நடக்கும் திறன், பார்வை திறன், செவித்திறன் மற்றும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன் போன்றவை அடங்கும். இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு நபரின் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான திறன்களாக அமைகின்றன. இந்த புதிய கண்டுபிடிப்பானது அந்தந்த நபருக்கு ஏற்ற பராமரிப்பை வழங்குவதன் மூலமாக மக்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்வதில் மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது.