
பவுர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலை- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுப்பார்கள். இந்த மாத பவுர்ணமி கிரிவலம் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறுகிறது. அன்று பகல் 2.52 மணி முதல் மறுநாள் ( ஆகஸ்ட் 9) பகல் 2.26 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. மேலும், பவுர்ணமி நாளில் வரும் ஆடி வெள்ளி மற்றும் திருவோணம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது கூடுதல் சிறப்பு என்பதால், பக்தர்கள் கூட்டம் அதகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பக்தர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 9-ம் தேதி விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுகிறது. அன்று காலை 9.25 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், மதியம் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. இந்த ரயில் வழியில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், ஆண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.