திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜோதிடர் ஒருவர் சொன்னதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் இரவில் திருச்செந்தூர் கடற்கரையில் நிலவொளியில் தங்கி மறுநாள் அதிகாலை புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் திரண்டு வருகின்றனர். இதற்காக கோயில் முன்பு பக்தர்கள் இரவில் இருந்து விடியும் வரை காத்திருக்கின்றனர். அப்படி தங்கும் பக்தர்களின் பொருட்கள் அதிக அளவு திருடப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
எனவே, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செயயும் வகையில், இன்று (நவம்பர் 8) முதல் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் யாரும் தங்க அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கோயில் கடற்கரை பகுதியில் தரிசனத்திற்காக குடும்பத்துடன் தங்கி இருக்கும் பக்தர்களை கோயில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர் அப்புறப்படுத்தினர்.
மேலும், அங்குள்ள மண்டபங்களில் தங்கிக் கொள்ளுமாறு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கோயில் முன்புள்ள கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக திருச்செந்தூர் கடற்கரை ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.


