இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட அல்-கொய்தா தீவிரவாதி உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அல்-கொய்தா பயங்கரவாதியான பிலால் கான் ஷஹரன்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இவருக்கு அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், 4,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த செல்போன் எண்களுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து செயல்படுபவர்களிடம் இருந்து வரும் உத்தரவுகளைப் பெற்று, இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அல்-கொய்தாவின் நிறுவனர்களான ஒசாமா பின்லேடன் மற்றும் அய்மன் அல்-ஜவாஹிரி ஆகியோரால் நியமிக்கப்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் முதல் தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் சம்பாலைப் பூர்வீகமாகக் கொண்டவருமான அசிம் உமர் சம்பாலியால் பிலால் கான் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
அசிம் உமரின் கருத்துக்களையும், செய்திகளையும் பரப்புவதற்கு பிலால் கான் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் தங்களின் ஆதரவாளர்களை ஆன்லைன் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை பரப்பு பிலால் கான் முயற்சித்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்து பிலால் கான், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை தியாகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானை ஆதரிக்கும் வீடியோக்களைப் பகிர்ந்ததோடு, காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


