
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத்தில் 69 அடியில் பிரம்மாண்ட விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் முக்கிய பகுதியான கைரதாபாத்தில் விநாயகர் சதுர்த்திக்காக சிலை வைத்து கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 71-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு உலக அமைதியை வலியுறுத்தி விஷ்வ சாந்தி என்ற பெயரில் 69 அடி பிரம்மாண்ட சிலை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலை செய்யும் பணி ஜூன் 6-ம் தேதி சர்வ ஏகாதசி தினத்தன்று ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஹைதராபாத் விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சந்தீப் ராஜ் கூறுகையில், 69 அடியில் செய்யப்படும் விநாயகர் சிலையின் ஒரு பக்கத்தில் கன்யகா பரமேஸ்வரியும், மறுபுறம் கஜ்ஜெலம்மா மாதாவும் இடம்பெறுவார்கள். சிலையின் தயாரிப்பில் அழகியல் ரீதியாக மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதிசெய்ய குழு அயராது உழைத்து வருகிறது. 50 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டன. இந்த சிலை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தாமல் முழுவதுமாக களிமண்ணால் தயாரிக்கப்படுகிறது.
மேலும் தண்ணீரில் கரையும் நீர் சார்ந்த வண்ணப்பூச்சு பயன்படுத்தப்படும், இது மூழ்கும் செயல்முறையை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுகிறது. குஜராத்தில் இருந்து களிமண், சணல் தூள், புல், மணல் மற்றும் புல் தூள் ஆகியவை பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் அடங்கும்.
சென்னையைச் சேர்ந்த 40 கைவினைஞர்கள், ஒடிசாவைச் சேர்ந்த களிமண் கைவினைஞர்கள், ஆந்திராவைச் சேர்ந்த வெல்டிங் குழு மற்றும் அடிலாபாத்தைச் சேர்ந்த ஒரு குழு உட்பட சுமார் 200 பேர் கொண்ட குழு விநாயகர் சிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.