சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக உயர்நிலைக் கூட்டம் இன்று (டிசம்பர் 17) நடைபெறுகிறது. இதில் சுதாகர் ரெடடி, அரிவிந்த மேனன் உள்ளிட்ட மேலிட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. திமுக இளைஞர் அணி மாநிலம் மூலம் பூத் கமிட்டி கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இந்த முறை தமிழ்நாட்டில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. இதற்காக இந்த கூட்டணிக்குள் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறது.
இந்த நிலையில், திடீரென டெல்லிக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்று வந்தார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது உள்ளிட்ட விஷயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக உயர்நிலை கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழக அரசியல் சூழல், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.


