பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கியதாக பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மீது சமாஜ்வாதி கட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநில தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்களுக்கு நேற்று முன்தினம் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பணி நியம ஆணைகளை முதலமைச்சர் நிதீஷ்குமார வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது பணி நியமன ஆணை பெற வந்த பெண் மருத்துவரின் ஹிஜாப்பை முதலமைச்சர் நிதீஷ் குமார் அகற்றினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிஹார் முதலமைச்சர் நிதீஷ்குமாருக்கு கண்டனம் வலுத்து வருகிறது. அந்த வீடியோவில், பணி நியமன ஆணை பெற வரும் பெண் மருத்துவரிடம் ஏதோ கூறும் முதலமைச்சர் நிதீஷ் குமார், திடீரென்று அந்த பெண் மருத்துவரின் அனுமதியின்றி ஹிஜாப்பை இழுத்து விலக்கினார். இந்த செயலைக் கண்டு மேடையில் இருந்தவர்கள் சிரித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணை உடனடியாக மேடையில் இருந்து பெண் காவலர் அழைத்துச் சென்றார். பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நிதீஷ் குமாருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள கைசர்பாக் காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற சமாஜ்வாதி கட்சியின் மூத்த நிர்வாகி சுமையா ராணா இந்த புகாரை அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


