பசிபிக் பெருங்கடலில் 3 படகுகள் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் போதைப்பொருள் கும்பல்களுடன் அமெரிக்கா ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து இதுவரை 25 தாக்குதல்களில் 95 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு படகுகள் மீது அமெரிக்கா ராணுவம் வான் வழித்தாக்குதல் நடத்தியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் படகுகள் சென்றதாக உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. முதல் படகில் மூன்று பேரையும், இரண்டாவது படகில் இரண்டு பேரையும், மூன்றாவது படகில் மூன்று பேரையும் கொன்றதாகவும் அமெரிக்கா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால், அவை போதைப்பொருள் கடத்தல் படகுகள் இல்லை என்றும், இந்த தாக்குதல் சட்டத்திற்குப் புறம்பானது என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால், சர்வதேச சட்டங்களின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் விளக்கமளித்துள்ளது.


