சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தற்காலிக அவைத்தலைவர் கே.பி.முனுசாமி தலைமையில் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முக்கியமான இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், கொள்கை பரப்பு மாநில இணைச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொள்ளாதது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் அவர் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில், மாஃபா பாண்டியராஜன் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்ளாதது கட்சியினரிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கும், மாஃபா பாண்டியராஜனுக்கும் கட்சிக்குள் மோதல் வலுத்து வருகிறது. பொதுவெளியிலேயே மாஃபா பாண்டியராஜனுக்கும், ராஜேந்திர பாலாஜிக்கும் மோதல் வெடித்தது. இதனால் அவர்கள் இருவரையும் அழைத்து அதிமுக விசாரணை நடத்தியது. இதன் காரணமாக அதிமுக தலைமை மீது மாஃபா பாண்டியராஜன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தொடர்பாக மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,” மும்பையில் ஒரு பணிக்காக வந்திருப்பது கட்சி, தலைமைக்குத் தெரியும். வேறு காரணங்கள் ஏதும் இல்லை. சென்னை வந்த பிறகு அவர்களை பார்ப்பேன்” என்றும் கூறினார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான பொன்னையன் கூறுகையில், “பொதுக்குழு நன்றாக நடந்தது. அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மாஃபா பாண்டியராஜன் வரவில்லை என்றால் அவருக்கு ஏதாவது காரணம் இருக்கும். யார் ஒருவர் வரவில்லை என்றாலும் தலைமைக்கு தகவல் சொல்லிவிடுவார்கள்,” என்றார்.


